ஐபிஎல் தொடரின் போட்டிக்கான அட்டவணை எப்போது வெளிவரும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படெல் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 13 வது சீசன் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்தது. இதற்கான அப்போதைய கால அட்டவணைகளும் வெளியிடப்பட்டன. துரதிஸ்டவசமாக கொரோனா வைரஸ் பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 மாதத்திற்கு மேலாக போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கு சாத்தியமில்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததால் ஐசிசி இந்த தொடரை அடுத்த வருடம் நடத்திக் கொள்ளலாம் என அறிவித்து விட்டது. அந்த காலகட்டத்தில் எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாததால் அதனை பயன்படுத்திக் கொண்ட ஐபிஎல் நிர்வாகம் செப்டம்பர்-அக்டோபர்-நவம்பர் ஆகிய மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டது.
அதற்கேற்றார்போல் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்தது. ஐபிஎல் தொடரின் கால அட்டவணை வந்துவிட்டாலும் போட்டிகளுக்கான அட்டவணை இன்னும் வெளிவரவில்லை. எப்போது வெளிவரும் என்கிற எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வந்தன.
இந்த வருடம் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆகையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட இருக்கிறது. அனைத்து வீரர்களும் ஏற்கனவே துபாய் மற்றும் அபுதாபி சென்றுவிட்டனர். பயிற்சிகளையும் துவங்கிவிட்டனர்.
இதற்கிடையில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை அறிவிப்பதில் சிக்கல் வந்தது. இரண்டாம் கட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என அறியப்பட்ட தால் ஐபிஎல் அணியை சேர்ந்த அனைத்து வீரர்களும் இயல்புநிலை பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இதனால் விரைவில் போட்டிக்கான அட்டவணை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வருகிற ஞாயிற்றுக்கிழமை 6ஆம் தேதி வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். மொத்தம் மூன்று மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.