2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் துவங்கும் தேதி மற்றும் இறுதிப் போட்டிக்கான தேதி என இரண்டையும் ஐபிஎல் நிர்வாகம் சேர்மன் பிரிஜேஷ் படேல் இன்று வெளியிட்டுள்ளார்.
உலகெங்கிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டன. குறிப்பாக இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பிசிசிஐக்கு சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு இருந்தது.
இதனை சரிக்கட்ட ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக வைத்து முடித்துவிட ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு வந்தது.
இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்துவது சாத்தியமற்றது என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனால் 2020 டி20 உலககோப்பை தொடர் ஒத்திவைக்கப்படலாம் என பேச்சுக்கள் அடிபட்டன. அதற்கேற்றார்போல ஐசிசி உறுப்பினர் குழுவும் இந்த ஆண்டு டி20 உலககோப்பை தொடரை தள்ளிவைக்க முடிவு செய்தது.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஐபிஎல் நிர்வாகம் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஆலோசனை நடத்தி வந்தது. அந்த ஆலோசனை குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி துவங்குவதாகவும் ஐபிஎல் நிர்வாகத்தின் சேர்மன் பிரிஜேஷ் படெல் என்று அறிக்கை வெளியிட்டார்.
அதேபோல், இறுதிப் போட்டி நவம்பர் 8ஆம் தேதி துவங்க உள்ளதாக தெரிவித்தார். அக்டோபர் மாதம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது முன்னமே தொடங்குவது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படெல் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரைவில் அரசு கவுன்சில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று ஆய்வு நடத்திய பிறகு போட்டிகளுக்கான அட்டவணைகளும் வெளியிடப்படும்.” என தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் மூன்று மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரானது 51 நாட்கள் நடக்கும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.