அயர்லாந்து அணியுடனான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நாளை (28-6-22) நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் ஓரிரு மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது. காயம் காரணமாக முதல் போட்டியில் பேட்டிங் செய்யாத ருத்துராஜ் கெய்க்வாட் இரண்டாவது போட்டியில் விளையாடுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்கலாம் என தெரிகிறது. சஞ்சு சாம்சன், ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக இஷான் கிஷனுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. ஒருவேளை கடந்த போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் தீபக் ஹூடாவே துவக்க வீரராக களமிறக்கப்பட்டால், சஞ்சு சாம்சன் வழக்கம் போல் மிடில் ஆர்டரில் களமிறங்குவார். சில தகவல்கள் சஞ்சு சாம்சனை விட ராகுல் த்ரிபாட்டிக்கே ஆடும் லெவனில் முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கின்றன.
மிடில் ஆர்டரில் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேலும், பந்துவீச்சாளர்களாக ஆவேஸ் கான், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருமே களமிறங்குவார்கள் என தெரிகிறது. ஒருவேளை அர்ஸ்தீப் சிங்கிற்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்தால் ஆவேஸ் கான் அல்லது புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளித்துவிட்டு அர்ஸ்தீப் சிங்கிற்கு இடம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
சஞ்சு சாம்சன்/ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், யுஸ்வேந்திர சாஹல், உம்ரன் மாலிக்.