தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியின் சிமி சிங் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் அயர்லாந்து அணி ஒரு வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் (முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது) இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.

அயர்லாந்தின் டப்லின்னில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு மாலன் 177 ரன்களும், டி.காக் 120 ரன்களும் எடுத்து கொடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்ததன் மூலம், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 346 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 347 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரும் இலக்கை துரத்தி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு அந்த அணியின் மிக முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சிமி சிங் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இவருக்கு ஒத்துழைக்காததால் 276 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்தது.

இந்த போட்டியில் அயர்லாந்து அணி தோல்வியடைந்திருந்தாலும், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கி சதமும் அடித்த சிமி சிங் மிகப்பெரும் சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இதற்கு முன்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய எந்தவொரு பேட்ஸ்மேனும் சதம் பதிவு செய்தது இல்லை. இதனால் ஒருநாள் போட்டிகளில் 8வது விக்கெட்டுக்கு களமிறங்கி சதம் அடித்த முதல் வீரர்கள் என்ற பெருமையை சிமி சிங் பெற்றுள்ளார்.