“ஊரடங்கிற்கு பிறகு இதை செய்யுங்கள்” – பவுலர்களுக்கு இர்பான் கொடுத்த டிப்ஸ்!
ஊரடங்கிற்கு பிறகு பயிற்சிக்கு திரும்பும் வீரர்கள் இதை செய்யுங்கள் என அறிவுரை கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறாததால் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக தொடர்ந்து இருக்கவேண்டிய பந்துவீச்சாளர்கள் நீண்ட நாட்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்ததால் மீண்டும் பயிற்சிக்கு திரும்புகையில் எளிதில் காயம் ஏற்பட அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. 2 மாதங்களுக்கு பிறகு, அண்மையில் பந்துவீச்சாளர்கள் வீட்டின் அருகில் உள்ள மைதானங்களில் பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.
மும்பை வீரர் ஷரதுல் தாக்கூர், தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் தங்களது பயிற்சியை துவங்கினர். அனைத்து வீரர்களுக்கும் எப்போது பயிற்சி துவங்கவுள்ளது என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சிக்கு திரும்பும் வீரர்கள் காயம் ஏற்படாமல் இருப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“விளையாட்டு நட்சத்திரங்கள் உடல்நிலை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சரியான முறையில் செயல்பட்டு காயம் அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். தற்போது நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு பயிற்சியை துவங்க இருப்பதால், பயிற்சியின்போது காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் துவக்கத்தில் மிதமான வேகத்தில் ஓடி பந்துவீச முயற்சிக்க வேண்டும். அப்போது தசைகள் மெதுவாக தளர்வு பெரும். பிறகு, சிறிது சிறிதாக வேகத்தை அதிகரித்து பந்துவீச வேண்டும். அவ்வாறு செய்வதால், தசைகள் மற்றும் எலும்புகளுக்கு அதிக அளவிலான அழுத்தம் இருக்காது. வீரர்கள் காயம் ஏற்பட வாய்ப்புகள் மிக குறைவு.
எந்த அணியாக இருந்தாலும் 4 முதல் 6 பவுலர்கள் இருப்பர். எனவே அனைத்து பவுலர்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.