இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ்
உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில் இன்னும் கூடுதல் ஆக்ரோஷம் தேவை என்று நியூஸிலாந்து லெக் ஸ்பின்னர் இஷ் சோதி தெரிவித்துள்ளார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற நியூஸிலாந்தின் 204 ரன்கள் இலக்கையே ஒரு ஓவர் மீதம் வைத்து இந்திய அணி ஊதியது, ராகுல், கோலி, பிறகு ஷ்ரேயஸ் அய்யரின் சரவெடி அதிரடி இந்திய அணிக்கு பெரும் வெற்றியைப் பெற்று தந்தது, இந்நிலையில் நாளை (ஞாயிறு) 2வது போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில் இஷ் சோதி கூறும்போது, “அன்று 200 ரன்கள் எடுத்தோம் ஆனால் பவுலிங்கில் ஆக்ரோஷம் போதவில்லை, மேலும் ஆக்ரோஷம் காட்டினால் நல்லது. ரன்கள் கொடுப்பது, கேட்ச்களை அவுட் வாய்ப்புகளை நழுவ விடுதல் கூடாது.
ஆட்டம் எப்படிப் போகிறது என்பதை அறுதியிட வேண்டும், இது பேட்ஸ்மெனுக்கு பேட்ஸ்மென், பவுலருக்கு பவுலர் மாறும். முதல் போட்டியில் கேன் வில்லியம்சனிடம் நிறைய விவாதித்தேன். 2-3 ஓவர் ஸ்பெல்லை வீசினேன், ஆனால் இதில் ஒரு ஓவர் தடுப்பு உத்தியைக் கடைபிடித்தோம். இன்னொன்று தாக்குதல் ஸ்பெல். எனவே முதலிலிருந்தே ஆக்ரோஷமாக வீச வேண்டும்.
ஷ்ரேயஸ் அய்யர், விராட் கோலி, ராகுல், ரோஹித் சர்மா என்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர், இவர்களை கட்டுப்படுத்துவது கடினம் தான். எனவே விக்கெட்டுகளைக் கைப்பற்றினால்தான் டி20யிலும் கூட வெற்றி சாத்தியம்.
எனவே நாளைய போட்டியில் ஆக்ரோஷ கிரிக்கெட்டுக்கு மாற்றமடைய வேண்டும், 200 ரன்களை தடுத்து வெற்றி பெற முடியாமல் போகக்கூடாது. மேலும் மற்ற மைதானங்களை விட இந்த மைதான ஒளிவிளக்குகள் சற்றே தாழ்வாக இருக்கும், எனவே கேட்ச் பிடிப்பது கடினம், இன்னும் கொஞ்சம் விளக்கொளியில் பயிற்சி தேவை” என்றார்.