இரட்டை சதம் அடிப்பதற்கு முன்னர் நான் மற்றும் விராட் கோலி இருவரும் என்ன பேசிக் கொண்டோம்? என்பதை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் இஷான் கிஷன்.
வங்கதேச சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஒருநாள் தொடரை இழந்தது. இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. ஆனால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுத்த விதம் பல்வேறு விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
ரோகித் சர்மா இல்லாததால் அந்த இடத்திற்கு உள்ளே வந்த இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை தன் வசப்படுத்தி இருக்கிறார். இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர், அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர், தனது முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய வீரர் என்ற பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
சச்சின், சேவாக், ரோகித் சர்மா ஆகியோருக்கு பின் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்பதால் இவருக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மைதானத்தில் இவருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி தொடர்ந்து இஷான் கிஷன் இடம் பேசிக்கொண்டே இருந்தார். அப்படி இவர்களுக்கு இடையில் என்ன பேச்சுவார்த்தை நடந்தது? என்பதை பற்றி சமீபத்திய பேட்டியில் இஷான் கிஷன் தெரிவித்திருக்கிறார்.
“நான் 95 ரன்கள் இருந்த பொழுது எந்த பவுலரை டார்கெட் செய்ய வேண்டும் என்று எனக்கு விராட் கோலி அறிவுறுத்தினார். சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று துடிப்புடன் இருந்தேன். ஆனால் இது எனது முதல் சதம் என்பதால் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினார்.
நான் 180 ரன்களை கடந்தபின், இரட்டை சதம் அடித்தாக வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். அந்த நேரத்தில் நானே நேரடியாக விராட் கோலியிடம் சென்று, ‘என்னை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் இறங்கி அடிக்க நினைத்து அவுட் ஆகி விடுவேன் என தோன்றுகிறது.’ என்றேன். அதற்கு அவரும் பொறுமையுடன் சரி என்று கூறி, எந்த பந்தை அடிக்க வேண்டும்? யாரை பவுண்டரி அடித்தால் சரியாக இருக்கும்? என்று என்னை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொண்டார்.
டபுள் செஞ்சுரி அடித்தபின், 300 ரன்கள் அடிக்க டார்கெட் செய்தேன். அதன் காரணமாகத்தான் அடுத்த பந்தில் இருந்தே பவுண்டரிகளாக அடிக்க முயற்சித்தேன். விரைவாக முடிந்துவிட்டது. இரட்டை சதம் அடித்து பங்களிப்பை கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தால் என்னை மீண்டும் நிரூபிப்பதற்கு காத்திருக்கிறேன்.” என பேட்டி கொடுத்தார்.