டேவிட் வார்னர் இடத்தை வேறு ஒருவரால் நிரப்ப முடியாது; கேன் வில்லியம்சன்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னரின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு பலத்தை மட்டுமே வைத்து தொடர்ந்து வெற்றி பாதையில் கம்பீரமாக நடைபோட்டு வருகிறது. பந்துவீச்சு பலத்தை மட்டுமே வைத்து நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது.
வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் அசுர பலம் கொண்டு எதிரணிகளுக்கு ஹைதராபாத் அணி சிம்ம சொப்பமனமாக திகழ்ந்து வந்தாலும், பேட்டிங்கில் அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஹைதராபாத் அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு, அந்த அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் திடீரென விலகியது தான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த கருத்தை அந்த அணியின் தற்போதைய கேப்டனான கேன் வில்லியம்சனே உறுதி செய்துள்ளார்.
டேவிட் வார்னர் குறித்து கேன் வில்லியம்சன் பேசியதாவது, ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னரை வேறு யாராலும், எப்பொழுதும் நிரப்பவே முடியாது. கடந்த தொடர்களில் ஹைதராபாத் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் டேவிட் வார்னரின் பங்கு மிக முக்கியமானது என்பது அனைவருக்கு தெரியும். டேவிட் வார்னர் உலகின் தலை சிறந்த டி.20 வீரர் என்று தெரிவித்துள்ளார்.

புள்ளி பட்டியலில் கெத்தாக முதலிடத்தில் இருக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று இரவு நடைபெறும் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது. இன்றைய போட்டியிலும் ஹைதராபாத் அணி வெற்றி பெறும் பட்சத்தில் நடப்பு தொடரில் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.