ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமாக தோல்வியுற்றதால், ஜோ ரூட் தாமாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது நல்லது என ஜெப்ரி பாய்காட் வலியுறுத்தியுள்ளார்.
நடைபெற்றுவரும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிவுற்று இருக்கிறது. இதில் மூன்று போட்டியிலும் இங்கிலாந்து அணி படுமோசமாக தோல்வியுற்று ஆஷஸ் தொடரையும் இழந்திருக்கிறது. ஜோ ரூட், பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் கேப்டன் பொறுப்பில் மிகவும் மோசமாக வழிநடத்தி வருகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரிஸ்பேன் டெஸ்ட் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இன்னும் மோசமாக 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த இரண்டு போட்டிகளிலும் செய்த அதே தவறை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் செய்ததால், இன்னிங்ஸ் மற்றும் 14 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று இருக்கிறது இங்கிலாந்து அணி. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் இழந்திருக்கிறது.
இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு வைத்திருந்த திட்டம் சரியாக செல்லவில்லை. அதனை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சரிசெய்து கொள்ளாமல் அதே தவறை மீண்டும் ஒருமுறை செய்தததன் காரணமாக ஜோ ரூட் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் கேப்டன் பதவியும் கேள்விக்குள்ளாக்கியது.
முன் அனுபவம் இல்லாத வீரர் தவறு செய்திருந்தால் திருத்திக் கொள்வதற்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் ஏற்கனவே ஆஸ்திரேலிய மைதானத்தை நன்கு உணர்ந்தவர் ஜோ ரூட். அவர் இப்படி ஒரே மாதிரியான தவறை செய்திருப்பதால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பாய்காட் கூறுகையில், “வரலாறு காணாத அளவில் படுதோல்வியை சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பதவியில் இருக்கும் ஜோ ரூட், நிச்சயம் அதிலிருந்து தாமாக முன்வந்து விலக வேண்டும். வேறு ஒரு புதிய வீரரை கேப்டனாக நியமிக்க இதுதான் சரியான தருணம். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக பார்க்கிறேன். ஆனால் இந்த தொடரில் படுதோல்வியை சந்தித்த பிறகு, மனதளவில் அதில் இருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் சில தொடர்கள் இதன் தாக்கம் இருக்கும் என்பதால், அது இங்கிலாந்து அணியின் வெற்றியையும் பாதிக்கும். விரைவில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றார்.