வேணாம்டா விட்றுங்க... இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸிற்கு எதிராக இந்திய அணியில் எழுந்த அடுத்த எதிர்ப்பு குரல் !! 1
வேணாம்டா விட்றுங்க… இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸிற்கு எதிராக இந்திய அணியில் எழுந்த அடுத்த எதிர்ப்பு குரல்

ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட்டு வரும் இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸிற்கு இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான அக்‌ஷர் பட்டேலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸ், ஐபிஎல் தொடரில் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸின் மூலமே வெறும் 120 பந்துகள் கொண்ட போட்டியில் 270+ ரன்கள் வரை இலகுவாக அடிக்க முடிகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸ் ஒட்டுமொத்தமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த ரூல்ஸை நீக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வேணாம்டா விட்றுங்க... இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸிற்கு எதிராக இந்திய அணியில் எழுந்த அடுத்த எதிர்ப்பு குரல் !! 2

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸில் தனக்கு பெரிய உடன்பாடு இல்லை, இதன் மூலம் கிரிக்கெட்டின் உண்மையான சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக தான் கருதுவதாக ஓபனாக பேசியிருந்தார். இதன்பின் இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜும், இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருந்தார்.

இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸ் முழுமையாக பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது, இதனால் ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர், தயவு செய்து இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸை நீக்குங்கள் என சிராஜ் சமீபத்தில் பேசியிருந்த நிலையில், தற்போது இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான அக்‌ஷர் பட்டேலும் இம்பேக்ட் ப்ளேயர் ரூல்ஸிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்‌ஷர் பட்டேல் பேசுகையில், “இந்த ரூல்ஸை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்கள் முழுவதுமாக பேட்ஸ்மேன்களை மனதில் வைத்தே இந்த ரூல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்படுகிறது, அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் பேட்டிங் செய்கின்றனர். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைப்பதால் முன்வரிசையில் களமிறங்கும் வீரர்கள் பெரிதாக எதைபற்றியும் யோசிக்காமல் அதிரடி ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றனர். அதே போன்று என்னை போன்ற ஆல் ரவுண்டர்களுக்கும் இது பிரச்சனையாக உள்ளது. கூடுதலான முழுநேர பந்துவீச்சாளரோ, பேட்ஸ்மேனோ எடுத்து கொள்ளலாம் என்பதால் என்னை போன்ற ஆல் ரவுண்டர்களுக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது, இது கிரிக்கெட்டிற்கு ஆரோக்கியமானது இல்லை என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *