டி20 உலககோப்பையில் என்னை எடுக்காததற்கு வருந்தினேன், ஆனால் மனமுடையவில்லை என சிறப்பாக பேட்டி அளித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.
மும்பையை சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் நடந்து முடிந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் ரிசர்வ் வரிசையில் இருந்தார். துரதிஷ்டவசமாக, கடைசி வரை அவரை அணிக்குள் எடுக்கவில்லை.
உலககோப்பையில் இடம் பெற்றிருந்த ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா ஆகியோரை விட மிடில் ஆர்டர் வீரர்களில் முன்வரிசையில் இருந்தார். ஆனாலும் அவரை டி20 உலககோப்பை அணிக்கு எடுக்காதது ஆச்சரியமாக தான் இருந்தது.
2022ல் எட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், 35.5 சராசரி மற்றும் 142 ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கிறார். ஆனாலும் அணியில் எடுக்கப்படாதது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். அவர் பேசியதாவது:
சிறு வயதிலிருந்தே எனக்கு உலககோப்பையில் விளையாடுவது என்பது கனவு. அப்படி ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைக்காமல் போனது மிகுந்த வருத்தம் அளித்தது. ஆனால் அதை நினைத்து, நான் முடங்கிப் போகவில்லை தொடர்ந்து எனது செயல்பாட்டை ஒருநாள் போட்டிகளில் வெளிப்படுத்தினேன். அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுப்பது ஒவ்வொரு வீரருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அது எனக்கு டி20 உலககோப்பையில் அமையாதது ஏமாற்றம்தான்.
அந்த சமயத்தில் நான் என்னை விட்டுக் கொடுக்காமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு சென்று விட்டேன். அதில் நிறைய ரன்கள் அடித்து எனது நம்பிக்கையை மீண்டும் பெற்றுக் கொண்டேன்.
பொதுவாக வெளியில் என்னைப்பற்றி பேசுவதை, தவறை விமர்சித்து எழுதுவதை நான் கவனிப்பேன். அது சில நேரங்களில் என்னை உற்சாகப்படுத்தும், சில நேரங்களில் அவர்கள் நினைப்பது தவறு என நிரூபிப்பதற்கு வாய்ப்பாகவும் இருக்கும். இதுவரை நான் அப்படித்தான் எனது பேட்டிங்கை அணுகியுள்ளேன். பயிற்சியின் போதும் இந்த தவறு உனக்கு இருக்கிறது என கூறினால் அப்படி இல்லை என நிரூபிக்க முற்படுவேன்.
உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்கிற எனது கனவு கட்டாயம் இந்த வருடம் நிறைவேறும். அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாட வேண்டும் என்று கனவு கண்டுள்ளேன். அதுவும் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு அதிகமாகவே இருக்கிறது. அதற்காக பாடுபட்டு வருகிறேன்.” என்றார்.