நான் சில பவுலர்ஸ குறி வச்சிருந்தேன்… நான் மட்டும் இல்லை, வெற்றிக்கு இவரும் காரணம்; ஸ்டோய்னிஸ் அதிரடி பேச்சு
மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி பேட்டிங்கின் மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் தொடரின் 39வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றத்து. சென்னை – லக்னோ இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 108 ரன்களும், சிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் நம்ப முடியாத பேட்டிங்கை வெளிப்படுத்தி இறுதி வரை விக்கெட்டும் இழக்காமல் 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.3வது ஓவரில் இலக்கை எட்டிய லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டி குறித்து பேசிய அதிரடி நாயகனான ஸ்டோய்னிஸ், சென்னை அணியின் சில பந்துவீச்சாளர்களை தான் குறி வைத்து ரன் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டோய்னிஸ் பேசுகையில், “இந்த தொடரில் என்னைவிட மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் சில துவக்க வீரர்கள் உள்ளனர் என்பதே உண்மை. அனைத்து பந்துகளிலும் ரன் குவிக்க வேண்டும் என்பது எனது திட்டம் இல்லை, சில பந்துவீச்சாளர்களை குறி வைத்து முடிந்த அளவு ரன் குவித்து கொள்ள வேண்டும், அதே போன்று சில வீரர்களின் பந்துவீச்சில் கவனமாக இருக்க வேண்டும். நான் ரன் குவிக்க சிரமப்பட்ட நிலையில், நிக்கோலஸ் பூரண் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி என் மீதான அழுத்ததை குறைத்தார். போட்டியில் சில ஏற்ற இரக்கங்கள் இருந்தாலும் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள முயற்சித்தேன். என்னை சில வருடங்களுக்கு முன்பு யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை, எனது இடம் இளம் வீரர்களுக்கு கிடைத்தாலும் நானும் மகிழ்ச்சியடைவேன். நான் ஒரு அணிக்காக விளையாடினால் அந்த அணிக்கான எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன்” என்று தெரிவித்தார்.