கிரிக்கெட் போட்டிகள் நடக்க இன்னும் 6-8 வாரங்கள் ஆகுமா? – இந்திய அணியின் பயிற்சியாளர் கூறிய தகவல்!
இந்திய வீரர்கள் மீண்டும் பயிற்சியை துவங்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் எத்தனை காலம் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக, இரண்டு மாத காலத்திற்கும் மேலாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. திட்டமிடப்பட்டிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
சமூக பரவலை தடுக்க இந்தியாவில் இரண்டு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், வீரர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. பயிற்சிக்காக மைதானம் செல்லவும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
மே மாத இறுதியில் ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் செய்யப்பட்டது. அதன்பிறகு, வீட்டின் அருகில் இருக்கும் மைதானத்தில் மட்டும் வீரர்கள் பயிற்சி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. இருப்பினும், அதிகமான அளவில் கொரோனா பரவி வரும் இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு தற்போது வரை வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மற்ற இடங்களில் இருக்கும் வீரர்கள் மெதுவாக பயிற்சிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் எடுக்கும் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
“60 நாட்களுக்கும் மேலாக வீரர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததால், அவர்களது செயல்திறன் மற்றும் உடல்தகுதி என அனைத்தும் முன்பு போல இருக்காது. தொடர்ந்த அவர்களுக்கு பயிற்சியும் கண்காணிப்பும் தேவை. அவர்களை மீண்டும் நல்ல உடல்தகுதிக்கு கொண்டுவர குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து வாரங்கள் எடுக்கும்.” என்றார்.
“அவர்களது உடல் தகுதியை பரிசோதிக்க பிசிசிஐ உள்ளூர் தொடர்களில் அவர்களை ஆடவைக்க வேண்டும். அதைப்பொருத்து சர்வதேச போட்டிகளில் ஆட வைக்கலாம். எனது கணிப்பின்படி, சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கு குறைந்தபட்சம் ஆறு முதல் எட்டு வாரங்கள் எடுக்கும்.” எனவும் பரத் அருண் குறிப்பிட்டார்.