எதனால் இந்திய வீரர்கள் அடிக்கடி காயம் அடைந்து விடுகிறார்கள்? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் ரோகித் சர்மா.
இந்திய அணியில் முன்னணி வீரர்கள் காயம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக திருப்புமுனையாக இருக்கும் வீரர்கள் காயம் அடைவதால் பெருத்த பின்னடைவையும் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.
உதாரணமாக டி20 உலககோப்பைக்கு முன்னர் காயத்திலிருந்து குணமடைந்து வந்த பும்ரா ஓரிரு போட்டிகள் விளையாடிய உடனே மீண்டும் காயம் ஏற்பட்டு வெளியேறினார். டி20 உலக கோப்பை அணியில் இடம் கொடுக்கப்பட்டு அதன் பிறகு நீக்கப்பட்டார்.
அதேபோல் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியதால், டி20 உலக கோப்பையில் விளையாட முடியாமல் போனது. தற்போது வரை அவர் குணமடையவில்லை. வங்கதேச அணியுடன் நடக்கும் டெஸ்ட் தொடருக்கும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வந்திருக்கிறது.
மற்றொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தீபக் சகர், டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக இருந்தார். தென்னாப்பிரிக்காவுடன் நடந்த ஒருநாள் தொடரில் காயம் ஏற்பட்டதால் டி20 உலக கோப்பையில் இடம் பெற முடியாமல் போனது. அதன் பிறகு காயத்திலிருந்து மீண்டு வந்து வங்கதேசம் அணியுடன் ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் விளையாடினார். அதற்கு அடுத்த போட்டியில் மீண்டும் காயமடைந்து பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய அகடமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இளம் வீரர் குல்தீப் சென், வங்கதேசம் அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார். உடனடியாக இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இப்படி இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக காயம் அடைந்து வருவதற்கு என்ன காரணம்? உண்மையில் இந்திய அணிக்குள் என்ன நடக்கிறது? என்பது பற்றி ரோகித் சர்மாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
“இந்திய அணியில் வீரர்கள் அடிக்கடி காயம் அடைவது எங்களுக்கும் புதிதாக இருக்கிறது. அதன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்திருக்கிறது. இந்திய தேசிய அகடமியில் இருக்கும் மருத்துவர்களிடம் அமர்ந்து ஆலோசனை நடத்தி அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
டி20 உலகக்கோப்பை, ஆசியகோப்பை போன்ற முன்னணி தொடர்களில் முக்கியமான வீரர்களை காயம் காரணமாக இழந்து வருகிறோம். இதனால் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. மிகப்பெரிய போட்டிகளை இழக்க வேண்டியதும் நேர்ந்திருக்கிறது. உலகக்கோப்பை போன்ற தொடரில் இப்படி நடந்திருக்கக் கூடாது. ஆனால் நடந்து விட்டது.
இடைவிடாமல் சர்வதேச போட்டிகளில் நமது வீரர்கள் விளையாடி வருவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையால் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு ஓய்வு தேவை என்பதை அறிந்து அதற்கேற்றவாறு அடுத்தடுத்த தொடர்களுக்கு அவர்களை பயன்படுத்த வேண்டும். மேலும் 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாட வைக்க வேண்டும். முக்கியமான வீரர் என்பதற்காக முழுமையாக குணமடைவதற்கு முன்பே விளையாட வைப்பதும் தவறுதான்.” என்று பேசினார்.