வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், தன்னால் அதிக ஓவர்கள் வீசிய பின் டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் படுதோல்வியடைந்தது. முன்னணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்குதான் தோல்விக்கு முக்கிய காரணம் என அந்த அணியின் கேப்டனான ஜேசன் ஹோல்டர் தெரிவித்திருந்தார்.
தற்போது பேட்டிங்கில் டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆசைதான். ஆனால் 20 முதல் 30 ஓவர் வரை வீச வேண்டியிருப்பதால் கடினமாக உள்ளது என்று ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேசன் ஹோல்டர் கூறுகையில் ‘‘பந்து வீச்சுடன் டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்யவும் விரும்புகிறேன். இது அணியின் காம்பினேசனை பொறுத்து அமையும். நான் ஏராளமான ஓவர்கள் வீச கேட்டுக்கொள்ளப்படுகிறேன். என்னுடைய முதன்மையான பணி பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்துவதுதான். நான் பந்து வீச்சில் அதிக அளவில் சாதித்துள்ளேன். 20 முதல் 30 ஓவர்கள் பந்து வீசிய பின், டாப் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது கடினமான உள்ளது.
ராஸ்டன் சேஸ் போன்ற பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி என்னுடைய பணிச்சுமையை குறைத்துக் கொண்டால், என்னுடைய பேட்டிங்கில் மேலும் சற்று கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.

இந்த போட்டியில், தொடர்ந்து தடுமாறி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம். முதலாவது டெஸ்டில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதத்தை எடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஷனோன் கேப்ரியல், கெமார் ரோச் ஆகியோரின் பந்து வீச்சு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருந்தாலும் அவர்களுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே அந்த அணியால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இல்லாவிட்டால் பலவீனமே வெளிப்படும். வெஸ்ட் இண்டீஸ் அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷமாரா புரூக்ஸ், டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கெமார் ரோச், கீமோ பால், கேப்ரியல்.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. உள்ளூர் நேரப்படி பிற்பகலுக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.