ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்! உடனடியாக மாற்று வீரர் அறிவிப்பு!
ஐபிஎல் தொடரில் இருந்து பல்வேறு வீரர்கள் தொடர்ந்து வெளியேருவது ஐபிஎல் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே பல வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று வெளியேறிவிட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது வரை ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது பந்து வீசிய ஐதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கணுக்காலில் காயம் ஏற்பட்டு அந்த போட்டியில் இருந்து வெளியேறினார்.
கடைசிவரை அவரால் சரியாக செயல்பட முடியவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து போட்டி முடிந்த பின்னர் அவர்களுடைய உடல்நிலை சரியாக பரிசோதிக்கப்பட்டது. அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாட முடியாது எனவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் விளையாட வருவார் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு விளையாடிய மிட்செல் மார்ஷ் தற்போது மீண்டும் காயமடைந்து இந்தமுறையும் துரதிஸ்டவசமாக ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் சென்றுவிட்டார்.