நானும் 90ஸ் கிட் தான்.. எனக்கும் இந்த கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்கும் – பும்ரா கூறிய போட்டி எது?
மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் எனக்கு மிகவும் பிடித்த போட்டி எதுவென தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் ஜஸ்பிரித் பும்ரா கடந்த இரண்டு ஆண்டுகளில் லிமிட்டட் ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 26 வயதான பும்ராஹ் ஒருநாள் தொடர்களில் அறிமுகமான அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
இந்திய அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் ஆடிவரும் பும்ராஹ் அண்மையில் இயான் பிஷப் மற்றும் சான் பொல்லாக் இருவருடனும் நடைபெற்ற உரையாடலில் பங்கு பெற்று அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது விளக்கத்தை அளித்தார்.
அதில் தற்போது ஆடி வரும் மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் எது உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பும்ராஹ், “எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். ஆனால் என்னை விட சிறிய வயது உடைய பல கிரிக்கெட் வீரர்களை நான் சந்தித்தேன். அவர்களுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சுவாரசியம் நிறைந்ததாகவும் மிகவும் பிடித்ததாகவும் இருக்கிறது.
ஆனால் 90களில் பிறந்த நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதனால் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆடுவது மிகவும் பிடிக்கும். நான் அதை தற்போது இந்திய அணிக்காக ஆடி வருகிறேன் என்பது எனக்கு பெருமை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக என்னை தயார் செய்து கொண்டு வருகிறேன்.” என்றார்.
பும்ராஹ் இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 68 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 5 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் இவரைச் சேரும்.