ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டம்பிங் ஆனதன் மூலம் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட்.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதில் ஜோ ரூட் 118 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் அடித்து ஏழு ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு நட்சத்திர வீரர் ஜோ ரூட் 46 ரன்கள் அடித்திருந்தார். அந்த நேரத்தில் சுழல் பந்துவீச்சாளர் நேத்தன் லயன் வீசிய பந்தை இறங்கி அடிக்க முயற்சித்து அலெக்ஸ் கேரியிடம் ஸ்டம்பிங் அவுட் ஆனார் ஜொ ரூட்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்ததோடு, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட சில ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் சாதனை:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,168 ரன்கள் அடித்துள்ள ஜோ ரூட் முதன்முறையாக ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆகியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த பிறகு ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் ஜோ ரூட். கிட்டத்தட்ட 250 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டுள்ளார். இந்த பட்டியலில் 4ஆவது 5ஆவது இடங்களில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் இருவரும் உள்ளனர்.
அதிக ரன்கள் அடித்தபின் ஸ்டம்பிங் முறையில் அவுட்டான வீரர்கள் பட்டியல் (டெஸ்டில்)
1. ஷிவ்நரைன் சந்தர்பால் – 11,414 ரன்கள்
2. ஜோ ரூட் – 11,168 ரன்கள்
3. கிரீம் ஸ்மித் – 8,800 ரன்கள்
4. விராட் கோலி – 8,195 ரன்கள்
5. சச்சின் டெண்டுல்கர் – 7,419 ரன்கள்