இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்திய அணியுடனான டி.20 தொடரில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் வரும் 12ம் தேதி துவங்க உள்ளது.

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை மிக மோசமாக இழந்த இங்கிலாந்து அணி, டி.20 தொடரை வெல்வதற்கு நிச்சயம் போராடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் விதமாக அந்த அணியின் மிக முக்கிய வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஆர்ச்சர், இன்னும் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், அவர் இந்திய அணியுடனான டி.20 தொடரிலும் விளையாட வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், ஆர்ச்சர் முழுக்க முழுக்க மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார். அவரது உடற்தகுதி முன்னேற்றம் அடைவதை உற்றுநோக்கிவருகிறோம். இப்போதைக்கு அவர் ஆடுவது குறித்து எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழு ஃபிட்னெஸ் அடைந்து அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்று சில்வர்வுட் தெரிவித்தார்.
டி.20 தொடருக்கான இங்கிலாந்து அணி;
இயன் மோர்கன் (கேப்டன்), லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், ஜேசன் ராய், மொய்ன் அலி, பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரான், டாம் கர்ரான், ஜானி பாரிஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிரிஸ் ஜோர்டன், அடில் ரசீத், ரீஸ் டாப்லி, மார்க் வுட்.