ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா செய்துள்ளார்.
51 வயதான ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்கு 2018 ஆம் ஆண்டு முதல் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து வந்தார். கடைசியாக நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் சென்ற ஜஸ்டின் லாங்கர், வெள்ளிக்கிழமை இரவு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தனது தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உடனடியாக அவரது ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் அளித்தது. காலம் கடத்தாமல் உடனடியாக தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜஸ்டின் லாங்கர்-ஐ விடுவிப்பதாக அறிவித்தது.
ஆலோசனைக் கூட்டத்தின்போது மேலும் இரண்டு ஆண்டுகள் தலைமை பயிற்சியாளர் பதவியில் தொடர்வதற்கு விண்ணப்பிக்குமாறு ஜஸ்டின் லாங்கர் இடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஜஸ்டின் லாங்கர் தனது பதவியை ராஜினாமா செய்த தகவலை விளையாட்டு மேலாண்மை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
அதில், “நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஜஸ்டின் லாங்கர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகவும் இந்த முடிவு உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த நிமிடமே தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து அவரை விடுவிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது. ஆகையால் தனது வாடிக்கையாளர் ஜஸ்டின் லாங்கர் இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் எந்தவித பொறுப்பிலும் இருக்க மாட்டார்.” என பதிவிட்டு இருந்தது.
அடுத்ததாக, 1998ம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் இதற்கான அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.