இந்திய அணியுடனான ஒருநாள், டி.20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
கிரிக்கெட் உலகின் வல்லரசாக திகழும் இரு அணிகள் இடையேயான இந்த தொடர் 27ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குவாரண்டைனில் இருக்கும் வீரர்கள் ஜிம்களில் பயிற்சி எடுத்து வருகின்றனர், சிலர் மைதானங்களிலேயே பயிற்சி எடுத்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அந்த அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ளதாக ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது.
பந்துவீச்சாளரான கேன் ரிச்சர்ட்சனின் மனைவிக்கு கடந்த வாரமே குழந்தை பிறந்துள்ளதால், கேன் ரிச்சர்ட்சன் தனது குழந்தையுடன், மனைவியுடனும் தனது நேரத்தை செலவிட விரும்புகிறார். அவரது முடிவிற்கு மதிப்பளித்து அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே போல், விலகிய கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஆண்ட்ரியூ டை இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒருநாள் மற்றும் டி.20 தொடருக்கான இந்திய அணி;
ஆரோன் பின்ச் (கேப்டன்), சியென் அபோட், அஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), கேமிரான் க்ரீன், ஜோஸ் ஹசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஸ்சேன், கிளன் மேக்ஸ்வெல், டேனியல் சம்ஸ், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரியூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.