இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கல் வாகன் சில நாட்களுக்கு முன்னர் கேன் வில்லியம்சன் கண்டிப்பாக இந்தியாவில் பிறந்திருந்தால் விராட் கோலியை விட மிகப்பெரிய வீரராகவும், அதேசமயம் உலக அளவில் எவ்வாறு ரசிகர்கள் விராட் கோலியை கொண்டாடுகிறார்களோ அதைவிட அதிகமாக கேன் வில்லியம்சனை கொண்டாடுவார்கள் என்று கருத்து கூறியிருந்தார்.
இதற்கு தற்பொழுது விளக்கமளிக்கும் வகையில் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மாண்டி பணேசர் சிறிய விளக்கத்தை அளித்துள்ளார்.
விராட் கோலி தான் எப்பொழுதும் நம்பர் ஒன்
கேன் வில்லியம்சன் சிறந்த பேட்ஸ்மேன் தான் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அவர் இந்திய அளவில் ஒப்பிட்டு பார்க்கையில் ரோகித் சர்மாவை விட மிகச்சிறந்த வீரர் என்று தான் கூற வேண்டுமே தவிர, விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று நம்மால் கூறிவிட முடியாது. மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒப்பிட்டு பார்த்தால் விராட் கோலி ஒரு ஆகச் சிறந்த பேட்ஸ்மேன்.

மறுமுனையில் கேன் வில்லியம்சன் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் விராட் கோலி போல் அவரால் என்றும் செயல்பட முடியாது என்று கூறியுள்ளார். மேலும் கேன் வில்லியம்சன் இந்தியாவில் பிறந்திருந்தாலும் அவர் ரஹானே இடத்தில்தான் விளையாடி இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்.
கண்டிப்பாக இந்திய அணி இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க இருக்கின்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முற்றிலுமாக வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும் என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் எப்பொழுதும் இங்கிலாந்தில் தட்ப நிலை மிக சூடாகவே இருக்கும். அதன் காரணமாக மைதானங்கள் எப்பொழுதும் வறண்டு காணப்படும். அது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் எனவே அவர்களுக்கு இதில் விளையாடுவது கைவந்த கலை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அதைவிட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்துவதற்கு போராட வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.