“நான் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வர விரும்பவே இல்லை.. இவர்தான் என்னை.. ” – குண்டை தூக்கிப்போட்ட கேரி கிறிஸ்டன்
2008ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக வர எனக்கு விருப்பமே இல்லை.. இவரால் தான் நான் வந்தேன் என பல வருட உண்மையை உடைத்துள்ளார் கேரி கிறிஸ்டன்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் விலகியபிறகு, புதிய பயிற்சியாளரை இந்திய அணி நிர்வாகம் தேடி வந்தது. அப்போது, கேரி கிறிஸ்டன் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டு 2008ல் பதவிக்கு வந்தார். இவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி 2009ஆம் ஆண்டு முதல்முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

அடுத்ததாக, 2011ஆம் ஆண்டு 2வது முறையாக தோனி தலைமையிலான அணி உலகக்கோப்பையை வென்றதும் இவரது பயிற்சி காலத்தில் தான். இந்திய அணி கிரிக்கெட் உலகில் அடுத்தகட்டத்துக்கு செல்ல இவரது பயிற்சி இன்றியமையாத ஒன்றாக அமைந்தது.
இந்நிலையில், எப்படி இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்தேன்? என்றும், அதில் கிடைத்த அனுபவம் குறித்தும் கேரி கிறிஸ்டன் பேசியுள்ளார். அவர் கூறுகையில்,
“உண்மையில், என்னக்கு இந்திய அணிக்கு பயிற்சியாளராகச் செல்ல சற்றும் விருப்பமே இல்லை. நான் அதற்க்காக உரியநேரத்தில் விண்ணப்பமும் அனுப்பவில்லை. ஒருநாள் மாலைநேரம், எனக்கு சுனில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த மெயிலைப் போலியானது என நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். மீண்டும் ஒருமுறை கவாஸ்கரிடம் இருந்து மெயில் வந்தது. அதில் நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறீர்களா? நேர்காணலுக்கு வருகிறீரக்ளா? எனக்கேட்டிருந்தார்.
பிறகு, இது உண்மை என உணர்ந்தேன். முதலில் எனக்கு வியப்பாக இருந்தது. ஆர்வத்தில் மெயிலை என்னுடைய மனைவியிடம் காண்பித்தபோது சிரித்துக்கொண்டே இந்திய அணிக்கு தவறான ஆள் தேவைப்படுகிறது என்று கிண்டல் செய்தார்.
அங்கு சென்றபிறகு தான், தேர்வுக்குழுவில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி இருப்பது தெரியவந்தது. அங்கு அப்போதைய இந்திய கேப்டன் கும்ப்ளே கூட இருந்தார். அவர் என்னை பார்த்தவுடன் சிரித்துவிட்டார். நான் தேர்வு செய்யப்படுவேன் என நினைக்கவில்லை. ஏனெனில், எனக்கு எவ்வித அனுபவமும் இல்லை.
நான் தயாராகவரவில்லை என்ற உண்மையே கூறிவிட்டேன். இன்னும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. பதில் அளித்தேன். தேர்வானேன். எல்லாம் 4 நிமிடத்தில் முடிந்துவிட்டது.” என்றார்.