கொல்கத்தா அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்; வந்த வேகத்தில் விலகியுள்ளார்
ஹாரி கர்னிக்கு பதிலாக கொல்கத்தா அணியில் இடம்பெற்ற அமெரிக்க வீரர் அலி கானும் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13வது சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடருக்கு வழக்கம் போல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் இந்த தொடர் சூடு பிடித்திருக்கும் நிலையில், மறுபுறம் காயம் காரணமாக வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து புவனேஷ்வர் குமாரும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து அமித் மிஸ்ராவும் கடந்த இரு தினங்களுக்கு காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தும் ஒரு வீரர் விலகியுள்ளார்.
இந்த தொடர் துவங்குவதற்கு முன்னதாக காயம் காரணமாக விலகியிருந்த ஹாரி கர்னிக்கு பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அமெரிக்காவை சேர்ந்த அலி கான் என்னும் பந்துவீச்சாளர்களை மாற்று வீரராக அறிவித்திருந்தது. ஐபிஎல் தொடரில் கால் பதித்த முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த அலி கானின் ஆட்டத்தை பார்க்க கொல்கத்தா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஒரு போட்டியில் கூட விளையாடாமல் அலி கான் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
காயம் காரணமாக அலி கான் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளரான அலி கான் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த குறிப்பிடத்தக்கது.
இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.