தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்திருக்கிறது கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஜோடி. முழு விபரங்களை இங்கே காண்போம்.
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் கேஎல் ராகுல் ஜோடி அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்கும், தனிப்பட்ட முறையிலும் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
1. முதல் நாள் முடிவில் துவக்க வீரர் கேஎல் ராகுல் 122 ரன்கள் அடித்திருந்தார். தென்னாபிரிக்க மைதானத்தில் இந்திய துவக்க வீரர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னர் வாசிம் ஜாபர் 116 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

2. மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர். செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய துவக்க ஜோடி கொடுத்த இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன்னர் கௌதம் கம்பீர் – விரேந்தர் சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.
3. 2010ஆம் ஆண்டிற்கு பிறகு, தென் ஆப்பிரிக்கா மைதானத்தில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய இரண்டாவது வெளிநாட்டு வீரராக கேஎல் ராகுல் இருக்கிறார். இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு டேவிட் வார்னர் சதம் அடித்துள்ளார்.
4. ஆசிய கண்டங்களுக்கு வெளியே, டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய துவக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் கடந்தது இதுவே முதல் முறையாகும்.

5. கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 242 இரண்டு பந்துகள் பிடித்துள்ளனர். 2010ஆம் ஆண்டிற்கு பிறகு தென்ஆப்பிரிக்கா மைதானத்தில் வெளிநாட்டு துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு பிடித்த அதிகபட்ச பந்துகள் இதுவாகும். இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஜோடி பிலிப் ஹியூக்ஸ் மற்றும் சைமன் காட்டிச் ஜோடி 263 பந்துகள் பிடித்திருந்தனர்.
6. ஆசிய நாடுகளுக்கு வெளியே, கேஎல் ராகுல் 5 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இந்திய துவக்க வீரர் அடித்துள்ள இரண்டாவது அதிகபட்ச சதங்கள் இதுவாகும். இப்பட்டியலில் 15 சதங்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் இருக்கிறார்.