இந்தியா – இலங்கை இடையே 3-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. காற்று மாசு தாக்கம் காரணமாக வெளிச்சம் குறைவாக காணப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை வீரர்கள் காற்று மாசு பிரச்சினையை கிளப்பினர்.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கமகே, மூச்சு விட சிரமப்படுவதாக நடுவர்களிடமும் புகார் தெரிவித்தார். இதனால் 17 நிமிடங்கள் ஆட்டம் தாமதமானது. இதையடுத்து நடுவர்களின் அனுமதியுடன் இலங்கை கேப்டன் சண்டிமால், மேத்யூஸ் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடினர்.
மேலும் இரண்டு முறை இதே பிரச்சினைக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய கேப்டன் விராத் கோலி அதிருப்தி அடைந்தார். கோலி ஆட்டம் இழந்ததும் இலங்கை வீரர்கள் சுவாச கவசத்தை கழற்றி விட்டனர். இதே போல் அவர்கள் பேட் செய்த போதும் அதை அணியவில்லை. இதையடுத்து இலங்கை வீரர்களை, ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்துவிட்டனர்.
இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘விராத் கோலி 2 நாட்கள் முழுமையாக பேட்டிங் செய்திருக்கிறார். அவருக்கு எந்த சுவாச கவசமும் தேவைப்படவில்லை. சீதோஷ்ண நிலைமை இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஆனால் எங்களது வீரர்களுக்கு இதில் எந்த உடல்நலக்கோளாறும் வரவில்லையே’ என்றார்.
இந்நிலையில் போட்டிக்குப் பின் பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், ‘ டெல்லி காற்று மாசு பற்றி எல்லோருக்கும் தெரியும். வீரர்கள் ஆடுகளத்தில் மூச்சு விட சிரமப்பட்டனர். வழக்கமான சீதோஷ்ண நிலை இல்லாததால் வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டிரெஸ்சிங் ரூம் திரும்பிய லக்மல், கமகே, தனஞ்செயா ஆகியோர் தொடர்ந்து வாமிட் எடுத்துக்கொண்டே இருந்தனர். பின்னர் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இது கிரிக்கெட்டில் புதுவிதமான பிரச்னை. அதனால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நடுவர்களின் முடிவுக்கே விட்டுவிட்டோம். நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடதான் வந்துள்ளோம். அதை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அதோடு வீரர்களின் பாதுகாப்பும் முக்கியம்’ என்றார்.