கப் ஜெயிக்குறோமோ.. இல்லையோ; ஆனா இதுதான் ரொம்ப முக்கியம் – ஐபிஎல்-க்கு முன் விராட் கோஹ்லி சொன்ன அசத்தல் பதில்!
கோப்பை வெல்வதை விட அணிக்கு விசுவாசமாக இருப்பது அனைத்திற்கும் மேலானது என ஐபிஎல்-க்கு முன்பாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக ஆடிவரும் விராட் கோலி பல வீரர்கள் அந்த அணியில் இருந்து மாறினாலும், இவர் ஒருவரை அந்த அணி நிர்வாகம் வெளியே விட்டுவிடாமல் தக்க வைத்து வருகிறது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு ஏலத்தில் பெங்களூரு அணி அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விட்டு விட்டு இவர் ஒருவரை மட்டுமே தக்க வைத்துக்கொண்டது.
அதன் பிறகு பல வீரர்கள் எடுக்கப்பட்டு டேனியல் வெட்டோரி அணிக்கு தலைமை தாங்கினார். பின்னர் 2013ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு முழுமையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் அதிகபட்சமாக 2016-ஆம் ஆண்டு இறுதிபோட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தது. அந்த சீசனில் விராட்கோலி கிட்டத்தட்ட ஆயிரம் ரன்களை தனி ஒருவராக அடித்தார்.
பெங்களூரு அணிக்கு கெயில், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற தலைசிறந்த வீரர்களை கொண்டிருந்தும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல வில்லை. இரண்டு முறை இறுதிப்போட்டி வரை சென்றிருக்கிறது. கோப்பையை வெல்லாத வருத்தம் ஆண்டாண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது. குறைந்தபட்சம் இந்த முறையாவது பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
துபாய் செல்வதற்கு முன்பாக அதன் கேப்டன் விராட்கோலி நம்பிக்கை தரும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு, கோப்பையை வெல்வது பற்றியும் தொடர்ந்து பெங்களூர் அணியில் தொடர்ந்து இருப்பது பற்றியும் பேசியுள்ளார்.
“எந்த ஒரு வீரருக்கும் கோப்பைக்கு மேலாக விசுவாசம் என்பது பெரிதாக இருக்க வேண்டும். அணி வீரர்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கின்றனர். வரும் ஐபிஎல்லில் என்ன நடக்கும் என்பதை மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டிருந்தார்.
Loyalty above everything. Can't wait for what's to come. ? pic.twitter.com/TXm5k2xYzV
— Virat Kohli (@imVkohli) August 9, 2020