அந்த மனுஷன் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்காரு.. – கேப்டனை புகழ்ந்து தள்ளிய குல்தீப்!
ஒரு கேப்டனாக எனக்கு இவர் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார் என மனம் திறந்து பேசியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சு ஜோடியாக இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவை ஓரம்கட்டிவிட்டு லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் முதன்மை சுழற்பந்துவீச்சு ஜோடியாக வலம்வருகிறது குல்தீப் – சஹால் ஜோடி. விராத்கோலிக்கு விருப்பமான சுழற்பந்து வீச்சாளர்களாகவும் இவர்கள் இருவரும் இருக்கின்றனர்.
அண்மையில், சற்று குல்தீப் யாதவ் சிரமப்படுவதால் ஜடேஜா மீண்டும் அணியில் எடுத்துவரப்பட்டார். ஆனாலும், குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்படாமல், தொடர்ந்து 15 வீரர்களில் இடம்பெற்று வருகிறார். அந்த அளவிற்கு கோஹ்லி இவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்.
இந்நிலையில் விராட்கோலி அணியில் தனக்கு எந்த அளவிற்கு உதவியிருக்கிறார் என்பது குறித்து இந்த ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்டுள்ளார். குல்தீப் யாதவ் கூறியதாவது:
“ஊரடங்கினால் வீரர்கள் பலர் சிரமப்பட்டுள்ளனர். எனக்கு ஓய்வுக்கு அதிக நாட்கள் கிடைத்தன. இதனால் காயத்தில் அவதிப்பட்டு வந்த நான் தற்போது முழுமையாக குணமடைந்து அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுகிறேன். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டேன். அதேநேரம் எனது உடற்தகுதியை சீராக பராமரிப்பதற்கு பயிற்சிகள் செய்கிறேன். இந்த நேரத்தில், பி.சி.சி.ஐ. டிரெய்னர்கள் கொடுத்த அட்வைஸ் எனக்கு பெரிய உதவியாக இருந்தது.”
“அணியில் கேப்டன் கோஹ்லி என்னைப்போன்ற வீரர்கள் மீது வைக்கும் நம்பிக்கை சிறப்பாக செயல்பட வைக்கிறது. கேப்டன் கோஹ்லியிடம் இருந்து, நெருக்கடியான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளம் வீரர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார். நமது திறமைகளை எப்போதும் வரவேற்பார். இந்திய அணியில் புதியதாக நுழைந்த போது எனக்கு அதிக ஆதரவு வழங்கினார். சில விஷயங்கள் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். இப்போதும் இந்நிலை தொடர்கிறது. அணியையும், சக வீரர்களையும் நன்றாக புரிந்து கொள்வதில் கோஹ்லி சிறந்தவர். இது எங்களைப் போன்ற வீரர்களின் பணியை களத்தில் எளிதாக்குகிறது.” என்றார்.