ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சந்தித்து வரும் இந்த மோசமான தோல்வி அணியின் கேப்டன் விராட் கோலியை எந்த அளவிற்கும் பாதிக்காது. உலக கோப்பையில் நல்ல மனநிலையுடன் கேப்டன் கோலி களமிறங்குவார் என சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் அனைத்தையும் தோல்வியை தழுவி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதில் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி மனம் உடைந்து கண்ணீர் சிந்துவதை அனைவராலும் பார்க்க முடிந்தது. இந்த தொடர் தோல்வி உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன் கோலியின் மனநிலையை கட்டாயம் பாதிக்கக் கூடும் எனவும் பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், விராட் கோலிக்கு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அளிப்பது அவசியம் என கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
குல்தீப் யாதவ் கூறியதாவது, “விராட் கோலி உலகில் மிகச்சிறந்த வீரர் அவர் பல சாதனைகளை முறியடிப்பதை நாம் கண்டிருப்போம். பந்துவீச்சாளர்களை அவ்வளவு லாவகரமான சமாளிக்கும் விராட் கோலி, மனதளவில் கட்டாயம் உடைந்து இருக்க மாட்டார். இந்த தொடர் தோல்வி அவரை வருத்தப்பட வைக்கலாமே தவிர.. மனதளவில் பாதிக்காது. ஏனெனில் அவரின் மன தைரியத்தை நான் கண் கூட கண்டிருக்கிறேன். எனவே, அவர் நிச்சயம் மீண்டு வந்து இந்திய அணி உலககோப்பையை வெல்ல உதவுவார்” என கூறினார்.

பெங்களூரு அணி சனிக்கிழமை கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியை மொஹாலியில் சந்திக்கிறது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆப் சுற்று குறித்து யோசிக்க முடியும்.