மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்? கசிந்த அதிகாரபூர்வ தகவல்!
காலவரையறை இன்றி தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது நடத்தலாம் என்பது குறித்த பிசிசிஐ தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கொரோனா பரவல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி எதுவும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது. இந்த சீசன் 29 போட்டிகள் முடிந்திருந்த நிலையில் இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு கரோனா பரவல் உச்சத்தை எட்டியது.
இந்தியாவில் நிலைமை கட்டுப்பாட்டை மீறி, நாள் ஒன்றின்று 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இவற்றை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரை பாதியிலேயே நிறுத்த பிசிசிஐ முடிவு செய்து, நிறுத்தவும் செய்தது.
பிசிசிஐ தரப்பு சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், மீதமுள்ள ஐபில் போட்டிகளை எப்போது? எங்கு நடத்தலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகளை இணைக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பதற்கான விவாதமும் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன.
பிசிசிஐ தரப்பிலிருந்து வெளிவந்த தகவலின்படி, “முதலாவதாக, பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை எங்கு நடத்துவது; எந்த சூழலில் வீரர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து திட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றன. அதேபோல், ஜூலை மாதத்திற்கு முன்பாக ஐபிஎல் தொடர் நடத்துவதற்கு திட்டமில்லை. ஆகையால் அதற்குப்பிறகு நடத்துவதற்கான சாதக நிலையை பார்த்து வருகிறோம். 2 புதிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைப்பது குறித்து தற்போது பேசுவதற்கு சரியான நேரமில்லை. புதிய அணிகள் இணைப்பை தள்ளி வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. சரியான நேரம் வரும்போது இணைக்கு குறித்த தகவல்களும் வெளி வரும்.” என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜூலை மாதத்திற்குள் இந்திய அணி இலங்கை மற்றும் இங்கிலாந்து மேற்கொள்ளவிருக்கிறது. இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.