எங்களுக்கு தான் மிகப்பெரும் சவால் காத்துள்ளது; வேதனையில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டின் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்வதாகும், சகோதரருடன் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடுவதாகவும் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்ட போட்டிகள் எப்போது தொடங்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை உள்ளது.
உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலம் ஓய்வில் இருப்பது ஆட்டத்திறனை பாதிக்கும் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்தீப் சர்மா கூறுகையில் ‘‘உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாததால் வீட்டிற்குள்ளேயே முடிந்த அளவிற்கு புஷ்அப், கிரஞ்சஸ், ஸ்குவாட்ஸ், ஸ்டைர் கிளிம்பிங் என உடற்பயிற்சியை செய்து வருகிறேன். மேலும் ஸ்விஸ் பாலும் விளையாடி வருகிறேன்.
உடம்பை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வதற்காக வீட்டில் உள்ள தோட்டத்தில் ரன்னிங் செல்கிறேன். எனது சகோதரருடன் டென்னிஸ் கிரிக்கெட் விளையாடுகிறேன். இந்த நீண்ட காலம் இடைவெளி பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமல்ல, பேட்ஸ்மேன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். லாக்டவுனுக்கு பிறகு பயிற்சியின்போது மீண்டும் பழைய நிலைக்கு வருவது சவாலானது’’ என்றார்.