பும்ராஹ் கிடையாது… நாங்க பட்ட அசிங்கத்திற்கு இது மட்டும் தான் காரணம்; பாபர் அசாம் வேதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த, டி.20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட்டை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட பெரிதாக ரன் குவிக்கவில்லை.
இதன்பின் 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, பேட்டிங்கில் சொதப்புவதில் தங்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது என்பது போல மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததாலும், பும்ராஹ்வின் தரமான பந்துவீச்சாலும், இந்திய வீரர்களின் கூட்டு முயற்சியாலும் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
இது குறித்து பாபர் அசாம் பேசுகையில், “பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்ததும், அதிகமான பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் விட்டதும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது, இதுவே எங்களது தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது, நாங்கள் செய்ய நினைத்தை ஓரளவிற்கு சிறப்பாக செய்தோம், ஆனால் அதிகமான டாட் பால்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடைசி நேரத்தில் களமிறங்கும் டெய்லெண்டர்கள் அதிகமான ரன்கள் எடுத்து கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடாது. பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களையும் நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது, ஆடுகளம் மிக சிறப்பாகவே இருந்தது. நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டோம். எங்கு தவறு நடந்தது, தோல்விக்கான காரணம் என்ன என்பதையும், தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்வோம். அடுத்த இரண்டு போட்டியிலும் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த தோல்வியை கடந்து செல்வதும் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவதும் அவசியம்” என்று தெரிவித்தார்.