நாங்க அடிச்ச ரன் கம்மினு யார் சொன்னது… இதுவே இங்க அதிகம் தான்… வெற்றிக்கு இது தான் காரணம்; லக்னோவை கெத்தாக வீழ்த்தியது குறித்து பேசிய டூபிளசிஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
16வது ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.
லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணியோ 108 ரன்களில் ஆல் அவுட்டாகி, 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
பேட்டிங்கில் மிக குறைவான ரன்களே எடுத்தாலும், பந்துவீச்சில் பெங்களூர் அணி மிக சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பர்னல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், பேட்டிங்கின் போது பவர்ப்ளே ஓவர்களை ஓரளவிற்கு சரியாக பயன்படுத்தி கொண்டதே வெற்றிக்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “பெங்களூர் சின்னசாமி ஆடுகளத்தை ஒப்பிடுகையில், லக்னோ ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டது. பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொண்டோம். இந்த ஆடுகளத்தில் பெரிதாக ரன்கள் குவிக்க முடியாது என்பதால் 135 ரன்கள் எடுத்தாலே வெற்றிக்கு போதுமானது என்று தான் நான் நினைத்திருந்தேன். நானும் விராட் கோலியும் இணைந்து முதல் 6 ஓவர்களில் 50+ ரன்கள் எடுத்ததே எங்களது வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் பார்க்கிறேன். முதலில் பேட்டிங் செய்ததும் எங்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை எதிகொண்டிருப்பார்கள். சரியான லைன் மற்றும் லென்தில் வரும் பந்துகளை எதிர்கொள்வதே இந்த ஆடுகளத்தில் சிரமம். நான் நினைத்திருந்த 135 ரன்களை விட சற்று குறைவாக நாங்கள் அடித்திருந்தாலும், வெற்றிக்கு இந்த இலக்கே போதுமானது என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் பந்துவீசுவதற்கே களத்தில் நுழைந்தோம். பவர்ப்ளே ஓவர்களில் 2 அல்லது 3 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டால் வெற்றியும் இலகுவாகிவிடும் என்று திட்டமிட்டிருந்தோம், அது நடந்துவிட்டது” என்று தெரிவித்தார்.