தோனி இருந்தவரை, அணியில் சுதந்திர பறவையாக சுற்றித்திரிந்தேன்; ஆனால் இப்போது? – நிதானமாக ஆடிவருவது குறித்து ஹர்திக் பாண்டியா பேட்டி!

அணியில் தோனி இருக்கும்போது என்னுடைய ஆட்டம் வேறமாதிரி இருந்தது. இப்போது நிதானம் காட்டுவதற்கு காரணம் இதுதான் என பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்டியா, டி20 போட்டிகளில் கேப்டனாகவும் உயர்ந்திருக்கிறார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நிதானம் காட்டி வருகிறார். இயல்பான ஆட்டம்போல தெரியவில்லை.

வழக்கமாக ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக சிக்ஸர்கள் அல்லது பவுண்டரிகள் அடிக்கக்கூடிய ஹர்திக் பாண்டியா, சமீப காலமாக மிகவும் நிதானத்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றுகிறார். அதேநேரம் இவரது ஸ்ட்ரைக் ரேட் வெகுவாக குறைந்திருப்பது, டி20 போட்டிகளில் விமர்சனத்தை தந்திருக்கிறது.

குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்று, ஹர்திக் பாண்டியா விளையாடினார். அதில் வெற்றிகரமாகவும் செயல்பட்டு கோப்பையை பெற்றுத்தந்தார். அதன்பிறகு தான் இவரது ஆட்டம் இவ்வளவு முதிர்ச்சியாகவும் நிதானமாகவும் இருந்து வருகிறது.

இதற்கு என்ன காரணம்? திடீரென உங்களது பேட்டிங் அணுகுமுறையில் இத்தகைய மாற்றம் வந்திருப்பதற்கு அவசியம் என்ன? என்று மூன்றாவது டி20 போட்டி முடிந்த பிறகு நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்புணர்வுடன் பதில் கொடுத்திருக்கிறார். அவர் பேசியதாவது:

“இன்றளவும் எனக்கு சிக்ஸர்கள் அடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு பிடிக்கும் என்பதற்காக நான் அதை செய்து கொண்டிருக்க முடியாது. அன்றையநாள் போட்டியில் என்ன தேவை மற்றும் அணியில் எனது ரோல் என்ன என்பதை புரிந்து விளையாடி வருகிறேன்.

ஒருபுறம் சிக்ஸர்கள் அடிக்க பிடிக்கும் என்றால், மறுபுறம் பார்ட்னர்ஷிப் அமைப்பது பிடிக்கும், அதேபோல் நன்றாக விளையாடி வரும் வீரருக்கு பக்கபலமாக நின்று துணை கொடுப்பதும் பிடிக்கும், மேலும் தற்போது கேப்டனாக விளையாடி வருவதால் இறுதிவரை களத்தில் நின்று அணியின் வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து வருவதும் பிடித்திருக்கிறது. தற்போது இருக்கும் அணியில் நான்தான் அதிக போட்டிகள் விளையாடிய சீனியர் வீரராக இருக்கிறேன். ஆகையால் அழுத்தம் நிறைந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதை அவர்களுக்கு எனது ஆட்டத்தின் மூலம் நான்தான் புரிய வைக்க வேண்டும்.” என்றார்.

மேலும் தோனி பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா, “கடந்த காலங்களில் அணியில் தோனி இருந்தார். கீழ் வரிசையில் நிதானம் காட்டுவார். அவர் இருக்கும் தைரியத்தில் நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்கள் பவுண்டரிகளாக அடித்து வந்தேன். ஆனால் இப்போது அவர் இல்லை. நிதானமாக விளையாட வேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது. அணியின் கேப்டனாகவும் இருக்கிறேன். ஆகையால் எனக்கு எந்த ரோல் வேண்டும். மற்ற வீரர்களுக்கு எந்த ரோல் கொடுத்தால் அவர்களிடம் இருந்து அதிக ஆற்றலை வெளிக்கொணர முடியும் என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.