தினேஷ் கார்த்திக்கின் சிக்ஸரால் இறந்து போனது போல் நாடகமாடியவர் கைது
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் இந்த மாதம் 6ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் வங்கதேச அணியுடனான இறுதி போட்டியில், கடைசி இரண்டு ஓவர்களில் களமிறங்கி போட்டியின் போக்கை தலைகீழாக மாற்றிய தினேஷ் கார்த்திக், கடைசி ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையிலும் அசத்தல் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இந்திய அணியின் இந்த அசாத்திய வெற்றியை தொடர்ந்து மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த வங்கதேச ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர், வங்கதேச வீரர்கள் உள்பட ரசிகர்கள் பலர் கண்ணீர் விட்டே அழுதனர். இந்த போட்டி முடிந்த அடுத்த நாளில் வங்கதேச ரசிகர் ஒருவர் இந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு செய்தி பரவியது. மேலும் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அந்த நபர் பணத்திற்காக நாடகமாடிய உண்மையை தற்போது வங்கதேச போலீஸார் கண்டுபிடித்து, அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அடில் சிக்கேதர் என்னும் அந்த நபரிடம் வங்கதேச போலீஸார் நடத்திய விசாரணையில், அடில் இந்திய வங்கதேசம் இடையேயான இறுதி போட்டியில் வங்கதேசத்திற்கு ஆதரவாக பெட்டிங்கில் ஈடுபட்டுள்ளார், ஆனால் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் வங்கதேச அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததால் பெட்டிங் செய்த பணத்தை கொடுப்பதற்கு பதிலாக தான் அவர் இறந்தது போன்று நடித்ததாக தெரியவந்துள்ளது”. இதே நபர் இலங்கை மற்றும் வங்கதேச அணியுடனான போட்டியின் போது வங்கதேச அணி மீது பெட்டிங் வைத்து 40,000 ரூபாயும் வென்றுள்ளதாக வங்கதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.