இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே தமிழ் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை இன்று மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்து வரும் மனிஷ் பாண்டே, ஒருநாள் போட்டிக்கான அணியில் தொடர்ந்து இடம்பெற்று வந்தார். அதன் பிறகு, சில தொடர்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியேற்றப்பட்ட பிறகு, உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காகவும், இந்திய ‘ஏ’ அணிக்காகவும் மிகச்சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்ததால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர், வங்கதேச அணிக்கு எதிரான தொடர் என அடுத்தடுத்து இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டதால், இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சையத் முஷ்டக் அலி டி20 தொடரில் கர்நாடக அணியை கேப்டன் பொறுப்பேற்று வழி நடத்தி வந்தார். இத்தொடர் முழுவதும் பேட்டிங்கில் இவரது பங்களிப்பு அணியின் வெற்றிக்கு முக்கியத்துவமாக இருந்தது.
நேற்றிரவு (டிசம்பர் 1ஆம் தேதி) நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் மணிஷ் பாண்டே 45 பந்தில் 60 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
