இதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை; முன்னாள் வீரர் காட்டம்
மகளிர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு மாற்றுநாள் இல்லையென்பதை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் கடுமையான விமர்சித்துள்ளார்.
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. போட்டி கைவிடப்பட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைகிறது. ஆனால், போட்டியில் விளையாடாமலேயே வாய்ப்பு நழுவிச் சென்றது இங்கிலாந்து வீரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு மாற்றுநாள் இல்லையென்பது சரியான முடிவு இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், மாற்றுநாள் இல்லாமல் அரையிறுதிப் போட்டியை நடத்தும் ஐசிசியின் முடிவு அபத்தமானது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருவருக்கு பதில் அளித்திருந்த மார்க் வாஹ், “இந்த ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி மாற்றுநாள் அறிவிக்கவில்லை. நிறைய வீரர்களுக்கு இந்தப் போட்டிகள் அவர்களது வாழ்நாளை மாற்றக் கூடியவை. முற்றிலும் இது அபத்தமானது” என தெரிவித்துள்ளார்.
Not as surprising as ICC not scheduling reserve days for finals in the biggest tournament of the year and possibly lifetime for many players. Absolutely absurd.#commonsense
— Mark Waugh (@juniorwaugh349) March 5, 2020
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று ஒரே நாளில், அதுவும் சிட்னி மைதானத்திலேயே இரண்டு அரையிறுதிப் போட்டிகளையும் நடத்த ஐசிசி அறிவித்திருந்தது. முதல் அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், மாற்று நாள் விளையாடுவதற்கு அறிவிக்கப்படாததால் இந்திய அணிக்கு அது சாதகமாகவும், இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமாகவும் அமைந்துவிட்டது.