கொலையை விட இது தான் மிகப்பெரும் குற்றம்; தோனி வேதனை
தடை செய்யப்பட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து கடந்த ஐபிஎல் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது பற்றிய சிஎஸ்கேயின் ஆவணப்படம் ஒன்று தயாராகி விரைவில் வெளிவர உள்ளது.
இதில், தோனி, “ஒருவர் மிகப்பெரிய குற்றம் செய்ய முடியும் எனில் அது மேட்ச் பிக்சிங் தான், கொலை அல்ல” என்று பேசியதாக படமாக்கப்பட்டுள்ளது. “‘Roar of the Lion” என்ற இந்த ஆவணப்படத்தின் 45 விநாடி ட்ரெய்லரில் தோனி, “அணியின் மீது புகார், என் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் காலக்கட்டம் எங்கள் அனைவருக்கும் கடினமான காலமாகும். தண்டனை மிகக்கடுமையானது என்று ரசிகர்கள் கருதினர். எனவே மீண்டும் வருவது என்பது உணர்ச்சிகரமான தருணம். நான் எப்போதுமே ஒன்று கூறுவேன், அதாவது ‘எது உன்னைக் கொலை செய்யாதோ அது உன்னை வலிமையானதாக மாற்றும்’ என்று” இவ்வாறு அதில் கூறியுள்ளார் தோனி.
இதற்கு முன்பாக தோனி எந்த ஒரு பிரச்சினை பற்றியும் இப்படி கருத்துக் கூறியதில்லை.
ஜூலை 2015-ல் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக தடை செய்யப்பட்டன. லோடா கமிட்டி பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகாலத் தடையாகும் இது.

மார்ச் 23ம் தேதி 2019 ஐபிஎல் டி20 தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே விராட் கோலி தலைமை ஆர்சிபி அணியை சென்னையில் எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ட்ரண்ட்டிங்கில் தோனி;
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்தும், மோசமான பீல்டிங் காரணமாக 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து, தோனி இருந்திருந்தால் இது மாதிரி நடந்திருக்காது என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் பரவலாக பேசி வருகின்றனர்.
போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரரின் பெயர் டிரெண்டிங்கில் வருவது வழக்கம். ஆனால், விளையாடாத தோனியின் பெயர் டிரெண்டிங்கில் வந்தது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.