முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பிறகு பேட்டியளித்த மயங்க் அகர்வால் கூறியது இதுதான்.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இரு அணிகளும் ஆடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இவருடன் மயங்க் அகர்வால் களமிறங்கினார்.
இருவரும் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்தனர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதம் விளாசினார். மறுமுனையில் இவருக்கு பக்கபலமாக இருந்த மயங்க் அகர்வால் அரைசதம் கண்டார். முதல்நாளில் பகுதிநேர ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. இந்தியா விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று காலை இந்திய துவக்க ஜோடி மீண்டும் ஆட்டத்தை துவங்கியது. துவக்கம் முதலே அகர்வால் மற்றும் ரோகித் இருவரும் அதிரடி காட்டினர். ரோஹித் சர்மா 150 ரன்களை கடந்தார். இதனால், எளிதில் 200 ரன்களை வெட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றினார்.
ஆனால், மறுமுனையில் இருந்த மயங்க் அகர்வால் சதத்தை பூர்த்தி செய்த பிறகு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதத்தை அடித்து சாதனைப் பட்டியலிலும் இடம் பெற்றார். இவர் 215 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 23 பவுண்டரிகளும் 6 சிக்சர்கள் அடங்கும்.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த மயங்க் அகர்வால் கூறுகையில், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்தது பெருமிதமாக இருக்கிறது. எனது நிலையை என்னால் கூற முடியவில்லை. அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரோகித் சர்மாவுடன் போட்டியை துவங்கியது மேலும் சிறப்பான ஒன்று. இதே போல் நாங்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கினால், எதிரணிக்கு அச்சம் ஏற்படும். முதல் போட்டியிலேயே எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. வரும் போட்டிகளில் இதே போல இந்திய அணிக்கு 400 ரன்களை எடுக்க உதவுவோம் என்றார்.
மேலும் பேசிய அவர் பந்துவீச்சில் அஷ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் எதிரணியை திணறடித்த விதம் இந்திய அணிக்கு நிச்சயம் வெற்றியை பெற்று தரும். துவக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் நடுவரிசை வீரர்களை வீழ்த்துவதில் எந்தவித தயக்கமும் இந்தியாவிற்கு இருக்காது என்றார்.