முதல்நாள் ஆட்டம் பார்த்துவிட்டு இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தான் வெல்லும் என கணித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்; டிரெண்டாகும் ட்வீட்!
இரண்டாவது போட்டியின்முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணி விளையாடும் விதம் வைத்து, இந்த போட்டியில் இந்தியா வெல்லப்போகிறது என தனது ட்வீட் மூலம் தெரிவித்திருக்கிறார் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

களறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக துவக்க வீரர் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 4-வது வீரராக களமிறங்கிய விராட் கோலி 5 பந்துகள் பிடித்து டக் அவுட் ஆகி வெளியேற இந்திய அணி 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் கண்டது.
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹானே மற்றும் ரோகித் சர்மா இருவரும் எவ்வித தடங்கலுமின்றி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை அனாயசமாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். துவக்க வீரராக களமிறங்கி தற்போதுவரை ஆடிவரும் ரோகித்சர்மா 150 ரன்களைக் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ரோகித் உடன் ஜோடி சேர்ந்த ஆடிவரும் ரஹானே அரைசதம் கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த ஜோடி தற்போதுவரை 4வது விக்கெட்டுக்கு 140 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது.

இந்திய அணி ஆடிவரும் முனைப்பை வைத்து இந்த போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்லப்போகிறது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். அவர் பதிவு செய்த ட்வீட்டில்
“முடிந்துவிட்டது.. 1-1 #INDvENG ” பதிவிட்டிருந்தார்.
இதனை வைத்து பார்க்கையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றிருக்கிறது என்றும், தற்போது ஆடி வரும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெல்லப்போகிறது என்றும்; இதனால் இந்த ஆட்டம் 1-1 என சமனில் முடியும் என்றும் மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார். அவரது பதிவிற்கு இந்திய ரசிகர்கள் தங்களது பாணியில் பதிலளித்து வருகின்றனர்.
மைக்கேல் வான் ட்வீட்:
DOOMED … #1-1 #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) February 13, 2021