எங்க ஏரியாவுக்கு வந்து எங்கள அடிச்சு பாரு… வடிவேல் டயலாக்கில் சவால் விடும் பாகிஸ்தான் பயிற்சியாளர்
உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக இந்திய கேப்டன் கோஹ்லி சதம் அடித்து சாதனைகள் புரிந்தாலும், தற்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு தொடரில் தொடர் கெத்து காட்டி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என அனைவரும் கோஹ்லியை பாராட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் விராட் கோஹ்லிக்கு சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மிகச் சிறந்த வீரர், பேட்ஸ்மன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அவர் சதம் அடித்து இருக்கிறேன் என்று பெருமை கொள்ளலாம். ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் சதம் அடித்துவிட முடியாது. எங்கள் அணிக்கு எதிராக கோலியால் சதம் அடிப்பது என்பது மிக மிகக் கடினமாகும்.
அப்படி எங்களுடைய அணிக்கு எதிராகவும் கோலி சதம் அடித்து, விளையாடினால், அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்த அவரின் சாதனையை நினைத்து அவரின் ஆட்டத்தை ரசிக்கலாம். ஆனால், எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் கோலியை அவ்வளவு எளிதாக சதம் அடிக்க விட்டுவிடமாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.