வித்தியாசமான மிகப்பெரும் சாதனை படைத்த முன்னாள் கேப்டன்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மிதாலி 1999-ல் தனது 16-வது வயதில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சர்வதேச அரங்கில் நுழைந்தார். கடந்த 18 ஆண்டுகளில் மிகப் பெரிய உயரத்தை அடைந்த மிதாலி, 184 ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள், 49 அரை சதங்களுடன் 6,137 ரன்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த முதல் வீராங்கனை என்ற பெருமை மிதாலி ராஜுக்குக் கிடைக்துள்ளது. மிதாலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 20 வருடங்கள் மற்றும் 105 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
20 வருடங்கள் ஒரு நாள் போட்டியை விளையாடிய முதல் பெண் வீரரும் மிதாலி ராஜ்தான். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையும் புரிந்துள்ளார்.
36 வயதான மிதாலி ராஜ், இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து இந்திய மகளிர் அணியை 10 டெஸ்ட் போட்டிகள், 89 20- 20 போட்டிகளில் தலைமை தாங்கிச் சென்றார். இந்நிலையில் கடந்த மாதம் 20 – 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்களில் இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் (22 ஆண்டுகள் 91 நாட்கள்) படைத்துள்ளார். சச்சினைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இலங்கை வீரர் ஜெய சூர்யா (21 வருடங்கள் 184 நாட்கள்) உள்ளார்.