இந்த இருவர் சிக்கினால் வச்சு செய்வேன்.. கொக்கரித்த பாக்., சில்வண்டு!
கிரிக்கெட் உலகில் இந்த இருவரின் விக்கெட்டை வீழ்த்துவது தான் எனது லட்சியம் என கொக்கரித்துள்ளார் பாக்., அணியின் 19வயது வேகபந்து வீச்சாளர்.
பாக்., அணியின் 19வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது ஹொஸ்னின் தனது அசாத்திய வேகத்தினால் கிரிக்கெட் உலகில் பலரை கவர்ந்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்.

இவரை பல முன்னணி பத்திரிக்கைகள் பேட்டியெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இளம் வீரர், கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
அதில் ஒன்றாக, “எந்த கிரிக்கெட் வீரர் விக்கெட்டை வீழ்த்துவதற்கு காத்திருக்கிறீர்கள்?” என கேட்கப்பட்ட கேள்விக்கு அவரும் சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார். அவர் பதிலளித்ததாவது,

“இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் இவர்களது விக்கெட்டுகள் எனக்கு முக்கியமானதாகப்படுகிறது. அவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த ஆர்வமாகக் காத்திருக்கிறேன். இதற்காகவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் மோதும் போட்டிக்காக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்றார்.
“ஒவ்வொரு அணிக்கும் முக்கிய வீரராக கருத்தப்படுபவரின் விக்கெட்டை வீழ்த்தினால், அது நம் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். அந்த வகையில் இந்த இருவரும் எனக்கு முக்கியமாக படுகிறார்கள்.” எனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இருக்கும் இருவரின் விக்கெட்டை வீழ்த்த காத்திருப்பதாக கூறியது அவரது குறிக்கோளை எடுத்துரைக்கிறது.
இதற்கு நெட்டிசன்கள் பலர் இளம்வீரரை கிண்டலடித்து வருகின்றனர்.