இந்திய அணியுடன் மோதும் போட்டி என வந்துவிட்டால் எங்களது ஆட்டம் எப்படி இருக்கும் என தனது சமீபத்திய பேட்டியில் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது நவாஸ் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
டி20 உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருக்கும் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மெல்போன் மைதானத்தில எதிர்கொள்கிறது.
இந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் இரு அணிகளும் இரண்டு முறை மோதிக்கொண்டன. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவதாக சூப்பர் ஃபோர் சுற்றில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நூலிழையில் வெற்றி பெற்றது. அதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இந்தியாவையும் வீழ்த்தியது.
இந்நிலையில் சமீப காலமாக வலுவான நிலையில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் அணி மீண்டும் வருகிற டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபகாலமாக இருதரப்பு தொடர்களில் நன்றாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடரில் சற்று மோசமாக செயல்பட்டது. உலக கோப்பையில் மீண்டும் தனது பழைய பார்மிற்கு கொண்டு வருவதற்கும் முயற்சித்து வருகிறது.
பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுகிறது. பல்வேறு போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அவர்கள் மிக முக்கிய காரணமாக இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர் முகமது நவாஸ் மிகச் சிறப்பாக விளையாடுகின்றார். கடந்த முறை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 45 ரன்கள் இவர் அடித்தது பாகிஸ்தானின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான போட்டியிலும் இவர் மிகச்சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதும் பொழுது ஆட்டம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் அவர் பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், “இந்திய அணியுடன் மோதும் போட்டி என்றாலே அதிக அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இந்தியா போன்ற மிகப்பெரிய அணியுடன் நன்றாக விளையாடும் பொழுது அன்றைய நாள் போட்டியில் மிகுந்த நம்பிக்கை கொடுக்கும். முழுவதுமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நன்றாக செயல்படலாம். சமீபத்தில் இந்தியாவை வீழ்த்திய அனுபவம் மற்றும் நம்பிக்கை இருப்பதால் வருகிற உலக கோப்பை தொடரிலும் அவர்களை வீழ்த்துவதற்கு முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்.” என்றார்.