ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், முன்னாள், இந்நாள் கிரிக்கெ வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து முகமது ஷமி பேசுகையில், “இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஐ.பி.எல்.-ல் நான் விளையாடிய விதம் எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் கிடைத்த சாதகமான அம்சம் என்னவென்றால், இப்போது ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும். என் மீது எந்த சுமையும் இல்லை. தற்போது நல்ல நம்பிக்கையுடன் சரியான நிலையில் இருக்கிறேன்.

அணியில் இடம் பெற்றுள்ள எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீச முடியும். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இத்தகைய வேகம் தேவை. எங்களது மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் கூட இவ்வளவு வேகத்தில் வீசக்கூடியவர்கள் தான்.
மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சூப்பர் ஓவரில் 5 ரன்னுக்குள் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரை எனது பந்து வீச்சில் முடக்கியது இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த இன்னிங்சாகும் என்றார்.