டீமை மட்டுமல்ல ஆளையே முடிச்சுவிட்ட ஆஸி., அணி.. மொத்தமாக மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பும் முகமது சமி! 1

கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை வகித்த போதும் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 100க்கும் குறைவான ரன்கள் இலக்காக அமைந்தது. இதனை எளிதில் கடந்து ஆஸ்திரேலிய அணி வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என தற்போது முன்னிலை பெற்றுள்ளது

மூன்றாம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்து விளையாட தொடங்கியது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு இழக்க, இறுதியில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்சில் 11 ஆவது வீரராக களமிறங்கிய முகமது சமி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில், பேட் கம்மின்ஸ் வீசிய பந்து சமி பந்துவீசும் வலது கையைப் பதம் பார்த்தது.

இதனால் மிகுந்த வலியுடன் அவதிப்பட்ட முகமது சமி சிறிது நேரம் கழித்து ஆட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக வெளியேறினார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஸ்கேன் செய்ய அனுமதிக்கப்பட்டார். போட்டி முடிந்த பிறகு விராட்கோலி இது குறித்து பேசுகையில், “எதுவாகினும் மருத்துவ அறிக்கை வந்த பிறகு கூறமுடியும்.” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போது முகமது சமி குறித்த மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் அவரது வலது கையில் எலும்பு வலுவாக காயப்பட்டு இருக்கிறது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவரால் அடுத்த சில வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியாது.” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகையால் அவர் விரைவில் இந்த தொடரில் இருந்து விலகுவார் என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட இந்த முடிவு உறுதியாகிவிட்ட நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அதையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *