இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்து வருகிறார். நியூஸிலாந்துடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியின் போது அவர் சதம் அடித்து அசத்தினார். அந்த சதத்தினால் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.
தற்போது இந்திய அணி நியூஸிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பை மைதானத்தில் நடந்து. அந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
என்னதான் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றாலும், அந்த போட்டியை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. ஏனென்றால், அது விராட் கோலியின் 200வது ஒருநாள் போட்டி ஆகும். அந்த போட்டியை ஞாபகம் வைத்துக்கொள்ளும் படி அவரு அசத்தலான சதம் அடித்தார். அதுமட்டும் இல்லாமல் 200வது ஒருநாள் போட்டியில் சதம் அடிக்கும் இரண்டாவது வீரர் இவர்தான், இவருக்கு முன்பு தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் அவரது 200வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்த ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 12 அரைசதம் அடித்துள்ளார். இந்திய கேப்டன்களுடன் ஒப்பிடும் போது ஒரே ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் விராட் கோலி தான். இதற்கு முன்பாக முகமது அசாருதீன் 1998ஆம் ஆண்டில் 11 அரைசதம் அடித்திருக்க, 2009 ஆம் ஆண்டில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 11 அரைசதம் அடித்திருக்கிறார்.
2017ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 12 முறை அரைசதத்தை கடந்து இருக்கிறார். அதில் 5 சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் தலா ஒரு அரைசதமும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் தலா 1 சதம் அடுத்துள்ள விராட் கோலி, இலங்கைக்கு எதிராக 2 சதம் அடித்திருக்கிறார்.