மீண்டும் மைதானத்தில் கால் பதித்த தல தோனி; ரசிகர்கள் மகிழ்ச்சி
உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த தோனி மீண்டும் கிரிக்கெட் பயிற்சிக்கு திரும்பி உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியை தோல்வியை சந்தித்தது. இதற்கு பின் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை. நவம்பர் மாதம் தொடங்க உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் அவர் இடம்பெறமாட்டார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் U23 அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட போகிறார் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி அங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் அணியின் மூத்த வீரர்கள் நவம்பர் 8ம் தேதி தொடங்க உள்ள சையத் முஸ்தாக் அலி டிராபி விளையாட சூரத் சென்றுள்ளனர். அதனால் தோனி U23 அணியினருடன் பயிற்சியில் ஈடுப்படுவதாக கூறியுள்ளனர். தோனி உடல்ரீதியாக தன்னை தயார் செய்ய ஜிம், பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் பில்லியார்ட்ஸ் ஆகியவைகளையும் விளையாடி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சாம்பியன்கள் விரைவாக ஓய்வு பெறமாட்டார் என்பது உங்களுக்கே தெரியும். தனது எதிர்காலம் குறித்து தோனி என்ன முடிவு செய்துள்ளார் என்று எனக்கு தெரியாது. இது தொடர்பாக அவரிடம் பேசி முடிவெடுப்பதாக“ தெரிவித்திருந்தார்.