மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற தனது கடைசி லீக் போட்டியை வெற்றி பெற்றால் மட்டுமே போதாது. வேறு என்னென்ன செய்ய வேண்டும்? என்கிற விவரங்களை பின்வருமாறு காண்போம்.
இந்த வருட ஐபிஎல் தொடர் இதுவரை நடந்த சீசன்களை விட கூடுதல் நெருக்கடியாக சென்று கொண்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே தனது கடைசி லீக் போட்டிக்கு முன்னர் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மற்ற மூன்று இடங்களுக்கும் சிக்கல் நிலவி வந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. பேட்டிங்கில் 223 ரன்கள் குவித்து, டெல்லியை 146 ரன்களுக்கு சுருட்டியது. இதனால் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நல்ல ரன்ரேட் உடன் இரண்டாவது இடத்தை உறுதி செய்து, முதல் குவாலிபயர் போட்டியிலும் விளையாடுகிறது.
15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த லக்னோ அணி தனது கடைசி லீக் போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்கிற கட்டாயத்தில் களமிறங்கியது. கடைசி ஓவர் கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டவசமாக 1 ரன்னில் வெற்றி பெற்று ரன்ரேட் லக்னோ அணி மூன்றாவது இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது.
நான்காவது இடத்திற்கு இரண்டு அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்றுள்ளன. இதில் ஆர்சிபி அணி +0.180 ரன்ரேட் வைத்து வலுவான இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி -0.128 ரன்ரேட் உடன் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
இன்று முதலில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் ஆர்சிபி அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் நல்ல ரன்ரேட்டில் முடிப்பதும் அவசியம். 16 புள்ளிகளுடன் தொடர்ந்து 4ஆவது இடத்தில் ஆர்சிபி அணி இருக்கும். அடுத்து நடைபெறும் மும்பை-ஹைதராபாத் அணிகள் மோதும் லீக் போட்டியின் முடிவு பொறுத்து ஆர்சிபி அணியின் பிளே-ஆப் உறுதியாகும்.
அதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆப் செல்வதற்கு தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை வெறுமனே வெற்றி பெற்றால் மட்டுமே போதாது. ஆர்சிபி அணியைவிட ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் நிறைய ரன்கள் வித்தியாசத்தில் அல்லது நிறைய பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒருவேளை ஆர்சிபி அணி குஜராத் அணியிடம் தோல்வியை தழுவினால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை பெற்றால் மட்டுமே போதுமானது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றால், மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட 80+ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.