குறி வச்சு காத்திருக்காங்க… பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுக்க போவது இந்த டீம் தான்; முன்னாள் வீரர் உறுதி
ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸை மும்பை இந்தியன்ஸ் அணியே ஏலத்தில் எடுக்கும் என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் நிறைவைடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில், அடுத்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.
துபாயில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கடந்த இரண்டு தொடர்களில் பெரிதாக சோபிக்காத மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த வருட ஐபிஎல் தொடரில் பழைய பலத்துடன் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஃப்ரா ஆர்சரை விடுவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுக்கும் என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணி பலவீனமான அணியாக உள்ளது என்பதே உண்மை. அடுத்த தொடருக்கான மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜோஃப்ரா ஆர்சர் இல்லாததால் மும்பை இந்தியன்ஸ் அணி வெளிநாட்டு பந்துவீச்சாளர்களை ஏலத்தில் எடுப்பதில் கவனம் செலுத்தும். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்கை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி அதிக முனைப்பு காட்டும் என்றே நான் கருதுகிறேன். பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கிற்காக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் மிக கடுமையாக போராடும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.